கீவ்: உக்ரைனில் நாட்டில் போர் உச்சமடைந்து வரும் நிலையில், அங்குச் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 2ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்யா முன்னேறி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. இருப்பினும், இதற்கெல்லாம் ரஷ்யா அஞ்சியதாகத் தெரியவில்லை.
உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டில் போர் தொடங்கி உள்ள நிலையில், அந்நாட்டின் வான்வழி முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதனால், உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை உலக நாடுகள் மாற்று வழிகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றன. சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் அங்குச் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் தாயகம் அழைத்து வர முயன்று வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்திய மாணவர்கள்
இதனிடையே மேற்கு உக்ரைனில் அமைந்துள்ள செர்னிவ்சி நகரில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்களின் முதல் குழு உக்ரைன் எல்லையைக் கடந்து வெற்றிகரமாக ருமேனியா எல்லைக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் லிவிவ் மற்றும் செர்னிவ்சி நகரங்களில் வெளியுறவுத் துறையின் முகாம் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அங்குக் கூடுதல் அதிகாரிகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் நியமித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் ருமேனியா எல்லைக்கு இந்தியா மாணவர்கள் வந்துள்ளனர்.
போலாந்து எல்லை
அதேபோல போலந்து எல்லையில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள லிவிவ் நகரில் மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் போலாந்து நாட்டின் எல்லையை அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போலாந்து எல்லையில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவிற்கு 40 இந்திய மாணவர்கள் கல்லூரி பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் போலாந்து எல்லைக்கு நடந்து செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
உக்ரைன் வான்வழி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகள் மூலம் இந்தியர்களை அழைத்து வரும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே, உக்ரைனின் அண்டை நாடுகள் உடன் இந்தியா பேசி உள்ளது. எனவே, உக்ரைனில் இருந்து தரைவழியாக அண்டை நாடுகளுக்கு இந்தியர்களால் பாதுகாப்பாகச் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக ரஷ்ய அதிபர் புதின் கூட உக்ரைனில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Recent Comments