மணக்குள விநாயகர் கோயில் யானை நடைப்பயிற்சியின்போது பலியான சோகம்

புதுவை மணக்குள விநாயகர் கோயிலின் யானை லட்சுமி தனது இறப்பை முன் கூட்டியே அறிந்ததால் கடைசியாக பாகனின் கையை பிடித்து இழுத்து முத்தத்தை வாங்கிக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். இங்கு உள்ளூர் மக்கள் செல்வது போல் புதுவைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் கோயிலுக்கு செல்வதுண்டு.

இந்த கோயிலில் 32 வயதான யானை லட்சுமி பக்தர்களுத்கு ஆசி வழங்கி வந்தது. இந்த யானை தனது இருப்பிடத்திலிருந்து பாகன் அழைத்து வருவார். நேராக மணக்குள விநாயகரிடம் மண்டியிட்டு நமஸ்காரம் செய்யும். பிறகு கோயிலை சுற்றி வரும்.

கோயில் பிரகாரம்

அத்துடன் கோயில் பிரகாரத்தில் உள்ள மற்ற சன்னதிகளிலும் வணங்கிவிட்டு பிறகு பக்தர்களுக்கு ஆசி வழங்க செல்லும். பெண் யானையாக இருந்தாலும் தந்தம் இருந்ததால் இந்த யானையை மக்கள் தனித்துவமாக பார்த்து வந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருடன் நன்கு பழகக் கூடியது. லட்சுமிக்கு நன்கு தெரிந்தவர்களை பார்த்தால் குதூகலிக்குமாம்.

5 வயது லட்சுமி

இந்த யானை 5 வயதாக இருக்கும் போது இந்த கோயிலுக்கு அழைத்து வந்தார்களாம். 27 ஆண்டுகளாக புதுவையின் ஒரு அடையாளமாகவும் புதுவையின் ஒரு அங்கமாகவும் இருந்து வந்தது. இந்த யானைக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவ்வப்போது கால்களில் புண்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இந்த யானை தனது கால்களில் கொலுசு அணிந்திருக்கும்.

சப்தம்

இந்த சப்தத்துடன், தலையை அசைத்து ஆடி நடந்து வரும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்கிறார்கள் அந்த யானையுடன் பழகியவர்கள். நேற்றைய தினம் இந்த யானை நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கீழே சரிந்து விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தும்பிக்கை துடிதுடிக்க யானை இறந்துவிட்டது.

அதிர்ச்சி

இந்த யானையின் திடீர் இறப்பால் அதிர்ச்சி அடைந்த பாகன் யானையின் உடல் அருகே உட்கார்ந்து கொண்டு கதறி அழுத காட்சிகள் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மக்களேனு சொன்னா போதும் ஓடி வருவியே, இப்ப இப்படி சாய்ந்து கிடக்கியே என அவர் அழுததை கண்டு உடனிருந்தவர்களின் கண்களும் குளமாகின.

மணக்குள விநாயகர் கோயில்

யானை உடல் மணக்குள விநாயகர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். யானையை தொட்டு வணங்கி தங்களது பாசத்தை வெளிப்படுத்தினர். சிலர் அந்த யானையை எழுந்துரு என அழைத்தனர். ஆனால் அழைத்த குரலுக்கு எழாமல் யானை லட்சுமியின் ஆத்மா வெகு தூரம் சென்றுவிட்டது.

யானை நல்லடக்கம்

இந்த நிலையில் நேற்று மாலை யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் யானை லட்சுமி தனது இறப்பை முன்கூட்டியே அறிந்து கொண்டது தெரியவந்துள்ளது. ஒரு வீடியோவில் .யானை லட்சுமியை அதன் இருப்பிடத்தில் விட்டுவிட்டு பாகன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். அப்போது உடனே யானை லட்சுமி அந்த பாகனை கைகளை பற்றி கொள்கிறது. அவரும் யானையின் அருகே வந்து அதன் கன்னங்களை வருடி விட்டு தட்டிக் கொடுத்து முத்தம் கொடுத்துவிட்டு செல்கிறார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chockalingam