உக்ரைனில் இருந்து 470 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் முலம் தாயகம் திரும்புகிறார்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் ஒரு பகுதியினர் ருமேனியா எல்லை வழியாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்படுகின்றனர். ரஷியாவின் படையெடுப்பு காரணமாக உக்ரைன் தனது வான்வழியை மூடிவிட்டதால் மாணவர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தத்தளித்தனர். இதையடுத்து உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளின் எல்லை வழியாக அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரமாக மேற்கொண்டது. இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஏர் இந்தியாவின் 4 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இதில் ஏர் இந்தியாவின் விமானம் AI -1943 சிறப்பு விமானம் மீட்கப்பட்ட இந்தியர்களுடன் ருமேனியாவின் புக்காரெஸ்ட் நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 5 தமிழர்கள் உட்பட 470 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் தாயகம் திரும்புகின்றனர். இந்த விமானம் மாலை 4 மணி அளவில் மும்பை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே உக்ரைனில் இருந்து மும்பை திரும்புவோர் கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்காவிடில் பரிசோதனை நடைபெறும் என்றும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படும் எனவும் அதற்கான கட்டணத்தை விமான நிலையம் ஏற்கும் என்றும் மும்பை விமான நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர ருமேனியாவுக்கு 2 விமானங்களும் ஹெங்கேரிக்கு 1 விமானமும் விரைந்துள்ளது. ஏர் இந்தியாவின் AI 1941 விமானம் டெல்லியில் இருந்து ருமேனியா தலைநகர் புறப்பட்டது. உக்ரைன் எல்லை நாடுகள் வழியாக மீட்கப்படும் இந்தியர்கள், இந்த விமானங்கள் மூலம் தாய்நாடு அழைத்துவரப்பட உள்ளனர்.

Chockalingam