வலிமை திரை விமர்சனம்

கதைக்கு வருவோம், நெடுஞ்சாலையில் வரும் தொழிலதிபர்கள்,அப்பாவி மக்கள் என வித்தியாசம் பார்க்காமல்  வழிப்பறி செய்கிறது ஓர் மர்ம கும்பல். உச்சக்கட்ட வேகம்,பைக்கில் பல்டி, போதை என தப்புகளுக்கு இலக்கணமாய் திகழ்கிறது Satans Slaves எனப்படும் நிழல் உலக சாத்தான்கள்.

காவல்துறையின் கண் போல் காட்சியளிக்கிறார் ACP அர்ஜுனான நம் அஜித்குமார். வழக்கம்போல் “தல” என்று ஆனந்தகண்ணீருடன் கத்திய ரசிகர்கள், மனதளவில் சாரி AK என்று நினைத்தது கண்ணில் படுகிறது. அன்பின் சின்னமாய் அம்மா, பொறுப்பற்ற குடிகார அண்ணன், வேலையின்றி தவிக்கும் தம்பி இதுவே ACP அர்ஜுனின் குடும்ப பின்னணி. 

வறுமைல தப்புபண்ணிட்டேன்னு சொல்லி உழைக்கிறவன கேவலப்படுத்தாதனு சொல்ற வசனம்லாம் வினோத்தின் அந்தர் மாஸ். வேற மாரி பாட்டுல வேற லெவல் எனர்ஜியோட அஜித் சார பார்க்கமுடியுது.

காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்டிங் ஸ்பாட், டிஸ்கஷன் ரூம், கன்ட்ரோல் ரூம்(குறிப்பாக Third eye ரூம்) எப்படி இருக்குமென்று ஆர்ட் டிபார்ட்மென்ட் கவனம் செலுத்தியது சபாஷ்.

காணும் இடமெல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் வைத்து நிரப்பியிருக்கிறார் H. வினோத். மூன்று நிமிடங்கள் வந்தாலும் எதார்த்த உடல் மொழியால் தியேட்டர் மொமென்ட்டுகளை தந்த நடிகர் புகழுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

யார் இந்த Satans Slaves ? இவர்களுக்கு இவ்வளோ பில்ட்டப்பா என்ற கேள்வி எழலாம். இரண்டாம் உலகப்போரின் போது தோன்றிய அமெரிக்க வழி அர்க்கர்களே இந்த Satans Slaves. உடல் முழுக்க டாட்டூ, போறப்போக்கில் கொலை, கொள்ளை,கற்பழிப்பு என குற்றங்களை முகவரியாய் வைத்திருப்பார்கள்.  படத்திலும் அந்த பாணியை கையாண்டுருக்கிறார் H. வினோத். சில இடங்களில் வில்லன்களின் யுக்தி, வசனங்கள் வீக்காக தெரிந்தாலும், ஆக்ஷன் காட்சிகள் மூலம் விருந்து வைத்திருக்கின்றனர்.

வில்லன்களின் பைக் வீலிங்கே விருந்துனா , அஜித் சார் வீலிங்-கு சொல்லவா வேணும்..விசில் தான் !!! அர்ஜுனருக்கு வில்லு என்றால், அஜித்குமாருக்கு பைக் என்றே கூறலாம். கர்ணனின் கவசகுண்டலம் போல் தலைக்கவசத்துடன் அஜித் செய்யும் ஸ்டண்ட் காட்சிகள் பலே.

இயல்பான ஸ்டண்ட் காட்சியே கதிகலங்க வைக்கும். வானுயர பறக்கும் பைக் ஸ்டண்ட் காட்சிகளை கச்சிதமாக செதுக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனுக்கு சல்யூட்.

படத்தின் பின்னணி இசை சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், படத்தொகுப்பு அதை சமநிலை படுத்துகிறது. பில்லா, மங்காத்தா போன்ற அஜித் பாணி BGM இதில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

நீரவ்ஷா எனும் மூன்றாம் கண்ணுக்கு கூலிங் கிளாஸ் மாட்டி விட வேண்டும். ஒவ்வொரு ஃபிரேமும் பலே

இனி பல திரைப்படங்களை போனி கபூர் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்து போனி செய்யலாம்.

ஹீரோ வில்லனின் ஆட்டத்திற்கு மத்தியில் கணிக்க முடிந்த களமாகவே அமைக்கிறது இன்டெர்வல் பிளாக்.

ஹுமா குரேஷி மேலும் பல தமிழ் திரைப்படங்களில் தலை காட்ட வேண்டும் என்பதே சினிமா பிரியர்களின் ஆசையாகும். தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தில் பக்காவாக பொருந்தியுள்ளார். உடன் பணிபுரியும் அதிகாரி அளவில்லா ரொமான்ஸ், அலட்டல் என்றெல்லாம் இல்லாமல் ஆக்ஷனிலும், நடிப்பிலும் முத்திரை பதித்துள்ளார் ஹுமா.

ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிர் நாடியே ஒலி சேர்ப்பு எனப்படும் சவுண்ட் டிசைனிங் பணிகள் தான். இதை சரியாக செய்துள்ளார் சவுண்ட் டிசைனர் ராஜாகிருஷ்ணன்.

இரண்டாம் பாதியில் வரும் சகோதர பாசம், அம்மா சென்டிமென்ட் காட்சிகள் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ஃபுல் மீல்ஸ் என்றே கூறலாம். ஆனால் ரசிகர்களுக்கு இது படையலாக இருக்குமா என்றால் சந்தேகம் தான். 

Satans Slaves குழுவை ACP அர்ஜுன் எப்படி டீல் செய்கிறார். அவர்களின் நெட்ஒர்க்கை எப்படி முறியடிக்கிறார் என்பதே இரண்டாம் பாதியின் ஆணிவேர். மேலும் கட்டுமானத்தில் உள்ள பகுதியில் வரும் சண்டை காட்சி கூடுதல் பூஸ்டர். வில்லன் காட்சிகளிக் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

காட்சிகளில் கரெக்ட்டாக இருக்கும் H. வினோத் கருத்தூசி போடுவதிலும் வல்லவர். சினிமா எனும் சதுரங்க வேட்டையில் தீரனாக ஜொலிப்பவர் வினோத். இளைஞர்கள் தவறான பாதைக்கு எப்படி செல்கிறார்கள், பிள்ளைகளை புல்லிங்கோவாக மூளைச்சலவை செய்து யார் மாற்றுகிறார்கள் என்பதை சரியாக கட்டமைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் காலம் துவங்கி அவென்ஜர்ஸ் சூப்பர் ஹீரோஸ் வரை வில்லனை கிளைமேக்ஸில் எப்படி புரட்டுகிறார்கள் என்ற அதே ஃபார்முலாவை தான் வலிமை படத்திலும் கையாண்டுருக்கிறார்கள், என்ன சற்று டிஜிட்டல் வாயிலாக முன்வைத்துள்ளார்கள். இரண்டாம் பாதியில்  சென்டிமென்ட் மழை சற்று அதிகமாகவே பொழிகிறது. அதற்கு பொறுமை எனும் குடை நிச்சயம் தேவை. 

வலிமை : பொறுப்புள்ள காவல் அதிகாரியின் நேர்மை.

அஜித் எனும் மூன்றெழுத்து மந்திரத்திற்கு நாங்கள் கூறும் மூன்றெழுத்து வார்த்தை நன்றி !!!

Chockalingam