சென்னை: ரூ.8.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிடுக்கு வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நாளை காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில், 8 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு குளிர் சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள் மற்றும் 15 குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகள் அடங்கிய இரண்டு புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார்.
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 1981ம் ஆண்டு நிறுவப்பட்டது. பயிற்சிக்கான முக்கிய மையமாக விளங்கும் இந்நிறுவனம் அமைச்சுப்பணி முதல் அகில இந்தியப் பணி அலுவலர்கள் வரை அனைத்துத் தரப்பு அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி தரும் முதன்மை நிறுவனமாக விளங்குவதால், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையாலும், தமிழ்நாடு அரசாலும் மாநில நிர்வாகப் பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையேற்க, தலைமைச் செயலாளர் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் இறையன்பு, மனித வள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி க. ராஜேந்திரன் ஆகியோர் திறப்புவிழாவில் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
தமிழக ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Recent Comments