உக்ரைன் படைகளின் பதிலடி தாக்குதலை தாங்க முடியாமல் ரஷ்யப் படைகள் ஓட்டம் பிடித்ததால் மீண்டும் தலைநகர் கீவ்வை உக்ரைன் மீட்டது. புறநகர் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 அப்பாவிகளின் சடலங்களை உக்ரைன் அதிகாரிகள் மீட்டுள்ள பயங்கர வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல்களை தொடர்ந்தது. தலைநகர் கீவ் உள்ளிட்ட மூன்று நகரங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தியது. ஆனால், ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் படைகள் சரியான பதிலடி கொடுத்ததால் கீவ்வை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
ஒருகட்டத்தில் கீவ்வில் இருந்து தங்களது படைகளை வாபஸ் பெறுவதாக ரஷ்ய அறிவித்தது. அந்தளவிற்று ரஷ்யப் படைகளின் ராணுவ தளவாடங்களை உக்ரைன் படைகள் சின்னாப்பின்னமாக்கியது. கீவ்டை தொடர்ந்து இர்பின், புச்சா, கோஸ்டோமல் ஆகிய நகரங்களையும் ரஷ்யப் படைகளால் முழுமையாக கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்லியர் கூறுகையில், ‘ரஷ்யப் படைகளின் பிடியில் இருந்த இர்பின், புச்சா, கோஸ்டோமல் நகரங்களும், தலைநகர் கீவ்வும் முழுமையாக மீட்கப்பட்டது.
தற்போது இந்த நகரங்கள் மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. ரஷ்யப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன’ என்றார். மேலும் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் ஒலெக்ஸி கூறுகையில், ‘ரஷ்யப் படைகள் பின்வாங்கியதால் 30க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளன’ என்றார். மீட்கப்பட்ட நகரங்களில் ரஷ்யப்படைகளால் சிதைக்கப்பட்ட பகுதிகளை உக்ரைன் படைகள் ஆய்வு செய்து வருகின்றன. அதில் தலைநகரான கீவ்வின் புறநகர்ப் பகுதியில் மிகப்பெரிய புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ரஷ்யப் படைகள் கீவ்வில் இருந்து ெவளியேறும் போது, தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று புதைக்குழியில் போட்டு புதைத்துள்ளது தெரியவந்தது.
கொடூரமான இந்த செயலை ரஷ்யப் படைகள் செய்துள்ளன. புச்சா நகரத்தின் தெருக்களில் உடல்கள் சிதறிக் கிடக்கின்து. இதுதொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு, புச்சா நகரின் மேயர் அனடோலி ஃபெடோருக் கூறுகையில், ‘ரஷ்யப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 280 பேரை ஏற்கனவே புதைக்குழியில் போட்டு புதைத்துள்ளோம்.
உக்ரைன் ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களின் சடலங்களும் அதில் அடங்கும். கைப்பற்றப்பட்ட சடலங்களில் ஒருவரின் கைகள் வெள்ளைத் துணியால் பின்னால் கட்டப்பட்டிருந்தன. அந்த சடலத்தின் அருகில் உக்ரைன் பாஸ்போர்ட் தரையில் கிடந்தது.
புதைக்கப்பட்ட மக்கள் அனைவரும் தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் 14 வயது சிறுவனும் உள்ளான். புசங்கா ஆற்றைக் கடந்து உக்ரைன் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்ற போது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்’ என்றார். தொடர்ந்து உக்ரைன் எம்பி கிரா ருடிக் கூறுகையில், ‘ரஷ்யப் படைகள் உக்ரைன் மக்களின் கைகளை பின்னால் கட்டியபடி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். உடல்களை சாலையின் அருகே விட்டுச் சென்றனர். இதையெல்லாம் பார்த்து நடுங்குகிறேன். புச்சா நகரில் மட்டும் 28,000 மக்கள் வசித்து வந்தனர்.
தற்போது இந்த நகரத்தை சேர்ந்த 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ என்றார். புச்சா நகர மக்கள் கூறுகையில், ‘ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. நடந்து கொண்டிருந்த மக்களை எந்த காரணமும் இல்லாமல் அவர்களை சுட்டனர். ஸ்டெகோல்காவில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது’ என்றார். மேற்கண்ட கொடூர கொலைகள் குறித்து ஐ.நா-வின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கார்லா டெல் பொன்டே கூறுகையில், ‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி; அவரை கைது செய்ய சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.
உக்ரைன் அகதிகளுக்கு அடையாள அட்டை
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் ேபார் தொடுத்ததில் இருந்து சுமார் 40 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை அந்த நாடுகள் செய்து கொடுத்துள்ளன. அந்த வகையில் போலந்து நாட்டில் தஞ்சமடைந்த 6,25,000க்கும் மேற்பட்ட உக்ரைன் அகதிகளுக்கு தேசிய அடையாள எண்களை அந்நாடு வழங்கியுள்ளது. இதுகுறித்து போலந்து உள்துறை அமைச்சர் பாவெல் செஃபெர்னேக்கர் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 6.25 லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு தேசிய அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு, பள்ளிக் கல்வி அல்லது பிற சேவைகளை பெறமுடியும். போலந்தில் மட்டும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். மற்றவர்கள் ருமேனியா, மால்டோவா, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரிக்கு சென்றுள்ளனர்’ என்றார்.
ரஷ்யப் படைகள் அட்டூழியம்
ரஷ்யாவின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐக்கிய யூனியன் நாடுகள், மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘புச்சா மற்றும் உக்ரைனின் பிற நகரங்களில் நடந்த அட்டூழியங்களை பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
ரஷ்யப் படைகள் உக்ரைனின் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, ரஷ்யாவின் போர் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். இதில் ஐக்கிய யூனியன் நாடுகள் மற்றும் சில நாடுகள் இணைந்துள்ளன’ என்றார்.
208 ரஷ்ய மக்கள் கைது
உக்ரைன் மீது போர் தொடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் 208 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து ரஷ்ய உளவு அதிகாரிகள் கூறுகையில், ‘சைபீரியா முதல் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்குப் பகுதி வரை சுமார் 17 ரஷ்ய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாஸ்கோவில் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் சில் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 208 பேர் கைதாகினர்’ என்று தெரிவித்தனர்.
புகைப்படக் கலைஞரின் சடலம் மீட்பு
ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் இதுவரை மொத்தம் 5 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட தயாரிப்பாளருமான மேக்ஸ் லெவினின் சடலம், கீவ் தலைநகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 13ம் தேதி அவர் மாயமானதாக கூறப்பட்டட நிலையில், தற்போது கீவ்வுக்கு அருகிலுள்ள புகா நகரின் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதேபகுதியில் மேலும் 20 சடலங்கள் கண்ெடடுக்கப்பட்டதால், அவர்கள் குறித்த விபரங்களை உக்ரைன் படைகள் சேகரித்து வருகின்றன.
துருக்கியில் 2 அதிபர்களும் சந்திப்பு
உக்ரைன் – ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை குழுவில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி டேவிட் அராகாமியா சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புடினும் துருக்கியில் நேருக்கு நேர் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகள் வந்துள்ளன.
ரஷ்ய அரசுத் தரப்பில் இதற்கான உத்தியோகபூர்வ பதில் கிடைத்துள்ளது. கிரிமியாவின் பிரச்னை தவிர இதர பிரச்னைகள் குறித்து பேசவும் ரஷ்யா தயாராக உள்ளது. உக்ரைன் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள ரஷ்யா தரப்பில் வாய்மொழியாக ஒப்புக் கொள்ள முடிவு ெசய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.
செஞ்சிலுவை சங்கம் மீது புகார்
ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘மரியுபோலில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அங்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வௌியிட்ட அறிக்கையில், ‘சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரின் திட்டமிடப்படாத பணிகளில் மரியுபோலில் அழிவுகள் ஏற்பட்டு வருகிறது. வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் மரியுபோல் மக்களுக்கான உதவிகள் சென்றடையவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தது.
15,000 ரஷ்ய வீரர்கள் பலி
உக்ரைன் – ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையேயான போரில் 7,000 முதல் 15,000 வரை ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக நேட்டோ அமைப்பு மதிப்பிட்டிருந்த நிலையில், பலியான ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 18,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் உக்ரைன் தரப்பில் பலியானவர்களின் முழு விபரத்தை ரஷ்யா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Recent Comments